Search This Blog

Wednesday, October 3, 2018

இழந்ததும், உருவாக்கியதும்


"வானரங்கள் கனிக்கொடுத்து மந்தியொடு  கொஞ்சும்" மேற்கு தொடர்ச்சி மலையின் வளத்தைப் பற்றி நாம் பல பெருமைகள் பேசிக்கொண்டிருந்தாலும்/தெரிந்திருந்தாலும், மருத்துவ தாவரங்களை பொருத்தவரை வளமையிலும், வனப்பிலும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் குறைந்தது இல்லை. தமிழகத்தில் 80 கி. மீ   அகலமும், 32 கி.மீ  நீளமும் உடைய,இன்றைய திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பரந்து, விரிந்து இருக்கும் பாலாறு ஓடுகின்ற ஜவ்வாது மலைத் தொடர் ஒரு சிறந்த உதாரணமாகும். சந்தனக் காடுகள் இயற்கையாக நறுமணம் தரும். இந்த மலைத் தொடர் சங்க இலக்கியத்தின் பிற்கால நூலாக கருதப்படும் 'மலைபடுகடாம்' நூலின் களமாக இருந்திருக்கின்றது. இரணிய  முட்டத்து பெருங்குன்றூர், பெரும் கௌசிகனாரால் நன்கன்  வேண்மானை  புகழ்ந்து எழுதப்பட்டதாக இருப்பினும் மலையை யானைக்கு ஒப்பிட்டு, சத்தத்துடன் விழும் அருவி நீரை யானையின் மதநீருக்கு ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கிறது.
நெல்லி,. அசோகம், மா, புளி, மூங்கில், வாகை, பிரம்பு, வாழை, தினையும், வரகும், கருப்பஞ்சோலையும், விதவிதமான பூக்களையும் கொண்டிருந்த வளமைமிக்க கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென்மதிமங்களம் கிராமத்திலிருக்கும் நவ்வீர மலையும், ஜவ்வாது மலையினரின் இன்றைய நிலையும் கவலை அளிக்கிறது. இயற்கையாகவே இங்கு கிடைக்கும் வனப்பயிர்களும் சிறுமகசூல் பயிர்களையும், மூலிகை தாவரங்களையும் வளப்பதற்கான பயிற்சியும், தொழில்நுட்பமும், பொருளாதார உதவியும் கொடுத்து  சந்தைப்படுத்துகின்ற வாய்ப்பையும் வழங்க தவறியதால் 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு இளைஞர் வனத்துறையுடனான மோதலில் மரணித்ததால் அரசு அலுவலர்களை எதிரியாக மனதில் கருதும் போக்கு, நம்பிக்கையின்மையும், வனவாசி மக்களை ஆந்திராவில் செம்மரம் வெட்டும் கூலிகளாக மாற்றியிருக்கிறது.
நன்னனின் தலைநகராய் இருந்த செங்கம், மேல்செங்கமலையும் இன்றைக்கும் கடுக்காயும், சந்தனமும், மாகாளி கிழங்கு (மலைநன்னாரி என்ற பரு நன்னாரி), மூங்கில், முதலியவை இயற்கையாக வளரக்கூடியக் காடுகளை கொண்டதாய் இருக்கிறது. 
மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பெருக்கத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத இந்த கிழக்கு மலைத்தொடர் வனப்பும், வளமும் மிக்கதாயிருப்பினும் மூங்கில், விளாமரம், தும்பை தகரை, பேய்யத்தி, புங்கு, எருக்கு, ஆலமரம், நெல், புளி, கொய்யா, நெல்லி, கரும்பு, பலா, எலுமிச்சை, மாதுளை, தானியம் மற்றும் சிறுதானியம் போன்ற உணவு பொருளுக்கு பஞ்சமில்லாதப்  பகுதியாகவும் இருந்தது. பல 100 ஆண்டுகள் பழமையானப் பெரிய மரங்கள், நீரோடைக்கருகே பீம்மன்னமடவுக்கு அருகே நிற்கின்ற மிகப்பெரிய மருதமரங்கள் ஜவ்வாது மலையின் சிறப்பாகும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக  இந்த மலையில் இருந்த சந்தன மரங்களெல்லாம்  வெட்டி அழிக்கப்பட்டு மலைநன்னாரி தாவரங்கள், கிழங்குகள் எல்லாம் வியாபாரத்திற்காக தோண்டி எடுக்கப்பட்டுப் பணப்பயிருக்காகப் பட்டுப்பூச்சி மரம் (mulberry) வளர்த்தல் போன்ற தாவரங்களின் வளப்பதற்காக இயற்கையாக வளர்ந்த தாவரங்கள் அழிக்கப்பட்டன. மேலும் காட்டெருமைகள், யானைகள் போன்ற விலங்குகளும் வாழ்ந்து வந்தன, ஆனால் யானைகள் பிற்காலத்தில் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டன.  
பல வகை வண்டுகள், பூச்சிகள், பட்டாம் பூச்சிகள், தும்பி, வெட்டுக்கிளிகள், பாம்புகள்  போன்றவையும் காணப்படுகின்றன. 98% வனவாசி மக்கள் இருந்த இந்த பகுதியில் அவர்களுடையப் பாரம்பரியக் கலாச்சார பண்புகள், உணவுமுறைகள், மருத்துவ தாவரங்கள் பற்றிய அறிவு ஆகியவை அழிக்கப்பட்டு 70% மக்கள் மதுவுக்கு  அடிமையாக்கப்பட்டு, குறைந்த அளவு கல்வியுடனே படிப்பை நிறுத்தி வறுமையின் காரணமாகவும், புதிய இருசக்கர வாகனங்கள் வாங்கவேண்டுமென்ற அவாவிலும், கூரை வீடுகளை மாற்றி, நிரந்தர வீடுகள் கட்டவேண்டுமென்ற விருப்பத்தாலும், தங்கள் வாழ்வை பணயம் வைத்து செம்மரம் வெட்டும் கூலிகளாக மாறியிருக்கிறார்கள். அரசாங்கம் இங்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி இருந்தாலும், வனத்துறை பள்ளிகளை நடத்தி வந்தாலும், மலைவாழ் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஓரளவு மாற்றம் வந்தாலும் கூட பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் இளைஞர்கள் தவறான வேலைகளுக்கு இழுக்கப்படுகிறார்கள். இயற்கை  வளமிருந்தும்  மூலிகை, காய்கறி பயிர்கள், வனத்தோட்ட பயிர்கள், சிறுதானியங்கள் வளர்ப்பதற்கான வாய்ப்பிருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறிய அளவில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும்  மனமாற்றத்திற்கும் முயற்சி செய்தாலும் பெரிய அளவில் அது தாக்கம் ஏற்படுத்துவதில்லை. தன்னார்வளர்களும், அரசும் குறிப்பாக வனத்துறை, தோட்டக்கலை துறை, இந்திய மருத்துவ துறை ஆகியவை ஒருங்கினைந்துக் கீழ்கண்டப் பணியை மேற்கொள்வது இழந்ததை மீண்டும் பெற ஏதுவாக இருக்கும்.
1.   பொருளாதார, சமுதாய மேம்பாடு இல்லாமல் கல்வி, உடல்நலம், மனமாற்றம், ஆகியவை ஏற்பட வாய்ப்பில்லை. இதற்கு  முதல்படியாக மானாவாரியாக வளரும் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி, அதனை சுத்திகரித்து மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றி அதற்கான விற்பனை வாய்ப்பையும் ஏற்படுத்தல்  வேண்டும்.  
2.   இங்கு இயற்கையில் கிடைக்கும் கடுக்காய், நெல்லிக்காய், மருதம்பட்டை, மலைநன்னாரி, கழற்சிக்காய், சிறுகுறிஞ்சான், வாய்விடங்கம், தேன் முதலியவற்றை தாவரம் அழிந்து விடாமல் அல்லது நிலையாக சேகரிக்கின்ற வழிமுறைகளைப் பயிற்றுவித்து, சேகரிப்பிற்கு பின்னர் சீராக தரம் பிரித்து, உலர்த்தி, சித்த, ஆயுர்வேத மருந்து செய்கின்ற அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு சரியான  விலையில் நேரடியாக விற்பதற்கு வழிமுறை செய்தல் வேண்டும்.
3.   இந்த தட்பவெட்ப சூழலில் இயற்கையாய் வளருகின்ற  குறைந்தபட்சம் 100 வகையான, சந்தனம் உட்பட மருத்துவ தாவரங்களை வனத்திலும், பொது நிலங்களிலும், தனியார் நிலங்களிலும், வளர்ப்பதற்கான தொழில்நுட்பம், விதை அல்லது கன்றுகள், இயற்கை இடுபொருள்கள், ஆகியவற்றை  அரசு துறைகள்,  வழங்கி விவசாய தொழிலாளர்களின் கூட்டுறவு நிறுவனம் ஏற்படுத்தி அதற்கான உதவி தொகையையும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாகவும் பழங்குடியினர் சிறப்பு திட்டத்தின் மூலமாகவும் வழங்குதல் வேண்டும். மா, பலா, வாழை, மாதுளை, எலுமிச்சைப் போன்றப் பழப்பயிர்கள், உற்பத்தியைத் தனியார் நிலங்களில் உருவாக்க உதவி, சந்தை படுத்துவதற்கும் உதவ வேண்டும்.
4.   மேற்கல்வி கற்பதற்கான சிறப்பு பயிற்சி வழங்கி வாழ்வியலுக்கும்  பயன்படும் தொழிற்கல்விக்கு மாணவ மாணவியரை தயார்படுத்த வேண்டும். இவையெல்லாம் செவ்வனே செய்யும்போது இவர்கள் எளிதாகப் பணத்தை காட்டி மோசம் செய்கின்றவர்கள்  வலையில் சிக்காமல் தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தங்களுடைய இயற்கை  செல்வங்களை பயன்படுத்தி சுயசார்புடையவர்களாக இருப்பர்.

5.பாரம்பரிய மருத்துவ அறிவையும், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தையும் மீண்டும் நினைவூட்டி அவர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்குச் சுயசார்புள்ள மருத்துவ முறையைக் கடைபிடிக்க வைத்து நலமுடன் வாழ முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.