என் 10 வயது மகனுக்குக் கடந்த ஒரு வாரமாக, சளித்தொல்லை இருந்து வருகிறது. இதனால், இடைவிடாத தலைவலி, இருமல், உடல் வலி, பசியின்மை போன்ற உபாதைகளால் அவதியுறுகிறான். இதற்கு இயற்கை வைத்தியம் இருக்கிறதா?”
சித்த மருத்துவர் நாராயணன்:
நாம் குடிக்கும் தண்ணீரில் கிருமிகள் இருந்தால், இப்படிச் சளித்தொல்லை வரலாம். குடிக்கும் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில் சீரகத்தைச் சேர்த்துப் பருகுவது நல்ல பலனைக் கொடுக்கும். பதிமுகம் என்ற ஒரு தண்டை, தண்ணீரில் போட்டு கேரள மாநிலத்தவர்கள் பருகுவார்கள். அது கிடைத்தாலும் அப்படிச் செய்யலாம். கூடுமானவரை மழையில் நனையாமல் இருப்பது, சளி வராமல் தப்பித்துக் கொள்ள உதவும். அப்படிச் சளி வந்துவிட்டால், தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம், இரவு வேளையில் பாலில் மஞ்சள் பொடி மற்றும் மிளகுப் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்துப் பருகலாம். ஆடாதொடை இலை, துளசி, சித்தரத்தை மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் போல் செய்து சாப்பிட்டு வந்தால் சளித் தொல்லை கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆடாதொடை இலை பூ விற்பவர்களிடம் கிடைக்கும். கண்டந்திப்பிலி ரசம் சாப்பிடுவதும் நல்லது. தீபாவளி வரை இப்படிச் சளி, இருமல், காய்ச்சல் என்பது பரவலாகப் பலருக்கும் இருக்கும். நான் மேற்கூறிய கை வைத்தியங்களை இவர்கள் செய்து கொள்ளலாம். அதைப் போலவே, நிலவேம்பு குடிநீர் பொடி சித்த மருந்தகங்களில் கிடைக்கும், அதைக் கொதிக்கும் நீரில் போட்டுச் சாப்பிடுவதும் நல்லது.