இன்றைக்கு சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதோ இல்லையோ
நிலவேம்பு கஷாயம் பற்றி மக்களுக்கு மிக நன்றாக தெரிகிறது. பல்வேறு வைரஸ் கிரிமிகளால் வரும் பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் நிலவேம்பு கஷாயம் ஒரு நிச்சய தீர்வாக சித்த மருத்துவர்கள் கருதுகின்றனர்.
எல்லா வகை காய்ச்சலுக்கும் ஒரே தீர்வா, இது
எத்தனை தூரம் உதவியாக இருக்கும். இதை பாராசிடமால் போல் சுரம் வந்த பின் பயன் படுத்த
வேண்டுமா, சுரம் வராமல் தடுக்க உதவுமா . இதனை தண்ணீருக்கு மாற்றாக பயன் படுத்தலாமா.
எத்தனை நாள் குடிக்க வேண்டும். ஒரு முறை குடித்த பின் எத்தனை மாத இடைவெளியில் தற்காப்புக்காக
குடிக்க வேண்டும் போன்ற பல
கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கிறது
இந்த நிலவேம்பு குடிநீரில் அப்படி என்னதான்
இருக்கிறது . முதலில் கஷாயம்/ குடிநீர் என்றால்
என்ன என்று பார்போம். இன்றைக்கு ஹெர்பல் டீ என்று சொல்கிறர்களே அதை போன்றதே கஷாயம்/
குடிநீர். அதாவது சில மூலிகைகளை உலர வைத்து கரகர பொடியாக்கி அதனை கொதிக்கின்ற
நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி
குடிப்பது. மருந்தாக பயன் படுத்தும் பொழுது
அந்த மூலிகையில் இருக்கும் மருந்து சத்து நீரில் வரும் வகையில் பொடித்து, ஊற வைத்து , கொதிக்க வைத்து, அதே நேரத்தில் அதில் இருக்கும் ஆவியாக கூடிய நறுமண பொருள்
தப்பி செல்லாமல் மூடி வைத்து
கொதிக்க வைத்து வடி கட்டி கொள்ளுதல்.
நிலவேம்பு கஷாயத்தில் நிலவேம்பு, வெட்டிவேர்,
விலாமிச்சை வேர், சந்தனம், பேய்புடல், கோரைகிழங்கு, சுக்கு, மிளகு,பற்பாடகம் என்று 9 மூலிகைகள் உண்டு . ஒவ்வொரு மூலிகைக்கும் சிறப்பான மருந்தியல்
செயல் உண்டு. அவையின் கூட்டு செயல் சிறப்பானது. அதாவது தனிப்பட்ட மூலிகைகளின்
பயன்பாட்டில் இருக்கும் தன்மையை காட்டிலும், சில மூலிகைகளை சேர்த்து செய்யும் பொழுது
மருந்தின் செயல் தன்மை கூடுவதுடன், சில மூலிகைகளில் உள்ள விரும்பத்தகாத பண்பும் சமன்
செய்யப்படும், மருந்தின் குறைந்த அளவில் கூட நோய் நீக்கும் தன்மை சிறப்பாக இருக்கும். சுரம் என்பது பொதுவாக வாதம் , பித்தம், கபம் என்று
சொல்லும் மூன்றில் பித்தம் - வெப்பம் மிகுதியினால் வரும். எனவே அதனை சமன் படுத்தும்
மருந்து குளிர்ச்சியை தருவதாகவும் புளிப்பு, உப்பு, காரம் நீக்கிய கசப்பு , இனிப்பு சுவை மிகுந்ததாக இருத்தல் வேண்டும்.அதே நேரத்தில் வாத மிகுதியால்
ஏற்படும் வலியை குறைப்பதாகவும் இருத்தல்
வேண்டும். வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம்,மிளகு,பற்பாடகம் முதலியவை வெப்பத்தை குறைக்கும் பித்த சமணிகள்., கோரைகிழங்கு,
சுக்கு இரண்டும் வாதத்தின் வெளிப்பாடான வீக்கம்
வலியை போக்கும் .நிலவேம்பு, பேய்புடல் பித்தம்
மற்றும் கபத்தை சீராக்கும். வாத, பித்த, கபத்தை மூன்றையும் சீர்படுத்தும் தன்மையால் நிலவேம்பு கஷாயம்
சிறப்பு வாய்ந்தது.
ஒவ்வொரு மூலிகைக்கும் சிறப்பான மருந்தியல்
செயல் உண்டு.அதனை பற்றி தெரிந்து கொள்வோம். நிலவேம்பு 2 அடி வரை வளரும் செடி வகையை சார்ந்தது , இதன் இலை
மிளகாய் செடியின் இலையை போன்ற வடிவத்தில் இருக்கும். பாம்பின் நாக்கை போன்ற வடிவில்
மலரின் இதழ் இருக்கும். கசப்புகளின் அரசன் என்று வர்ணிக்கப்படும் இந்த செடியின் தண்டு
நான்கு பக்கங்களை உடையதாக இருப்பதால் எளிதில் இனம் காண முடியும். வேம்பு என்ற சொல்
கசப்பு என்பதை குறிக்கும். எனவே இதனை வேப்ப மரத்துடன். தொடர்புபடுத்தி மரம் என குழம்பக்கூடாது
. அண்மைக்கால ஆய்வுகள் நிலவேம்பு பல்வேறு வைரஸ் கிருமிகளை கொல்லும் என்றும் ஈரல் பாதிப்பை
தடுக்கும் தன்மையும், குருதி சர்க்கரை இரத்த
அழுத்தம் இரண்டையும் குறைக்கும் . பசியின்மையை
போக்கும் மருந்தியல் செய்கை உடையது என்று நிருபிக்கப்பட்டுள்ளது சுரத்தை கட்டுபடுத்தும் செய்கையும் முதன்மையானது.
வெட்டிவேர், விலாமிச்சை வேர் இரண்டும் பொதுவாக மணற்பாங்கான இடங்களில் மண் அரிப்பை கட்டுப்படுத்த
உதவும், 2 அடி வரை வளரும் தன்மையும் ஆண்டு முழுமையும் வளரும் புல் வகை தாவரங்கள் . வெட்டிவேர் நட்ட 15=18 மாதங்களில் இதன் வேர் நல்ல
மணம் தரக்கூடியதாக இருக்கும். உடலுக்கு குளிர்ச்சி தருவதற்காக தட்டி, பாய் , விசிறி
செய்து பயன் படுத்துவதுடன் வெயில் காலத்தில் மண் பானையில் நீரில் வெட்டிவேரை போட்டு
வைக்கும் பொழுதுஅதில்உள்ள நறுமண எண்ணையின் கிருமி நாசினி தன்மையாலும் குளிர்ச்சி தரும்
தன்மையாலும் பயன் படுத்துவது நமக்கு தெரியும்
. இந்த காரணத்தி னாலே சுரம் போக்கும் பித்தத்தை சீர் செய்யும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
விலாமிச்சை வேர் என்பது மலையாளத்தில் வெட்டிவேரின் பெயர் என்பதால் ஒரே மூலிகையை இரண்டு
முறை சேர்கிறார்களோ என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு. ஆனால் விலாமிச்சை வேர் தாவரயியல்
பெயர் CYMPOBOGEN JWARANCUSA, சந்தனமும் குறிப்பாக அதன் வைரம் பாய்ந்த கட்டை மற்றும்
வேர் பகுதிகளில் உள்ள நறுமண எண்ணையின் கிருமி நாசினி தன்மையாலும் குளிர்ச்சி தரும்
தன்மையாலும் சுரம் நீக்கும் தன்மை மற்றும் நிலவேம்பு, பேய்புடல் ஆகிய மூலிகைகளின் மிகுந்த
கசப்பு தன்மை மருந்து பருகுவதை வெறுக்கும்
நிலையை போக்கும். பேய்புடல் வேலி ஓரங்களில் வளரகூடிய ஏறு கொடி வகையை சார்ந்தது . குஜராத்
போன்ற மாநிலங்களில் இதன் காய் 'படோலம்என்ற பெயரில் சமைத்து சாப்பிட படும்., இந்த இலை
பித்தத்தை சீராக்கும் வீக்கத்தையும் உடல் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியையும் போக்கும்
. இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கும். சில மருந்து செய்கின்ற நிறுவனங்கள்
விலை குறைவு என்ற காரணத்தினால் பாகற்காய் கொடியை இதற்கு பதில் பயன்படுத்துகிறார்கள்.
சுக்கு பற்றி நான் சொல்ல தேவையில்லை . ஓவ்வொருவருக்கும்
தெரிந்த வீட்டு மருந்து என்றே சொல்லலாம். சுக்கு இல்லாத கஷாயம் இல்லை என்ற பழமொழியும்
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற சொல்லாடலும் நமக்கு தெரியும் . வாதத்தை சமன் படுத்தும்
வீக்கம் வலியை நீக்கி செரிமானத்தை சீர்படுத்தி, சுரத்தில் வரும் உடல் வலி, தலை வலி
ஆகியவற்றை போக்கும். மிளகும் நமக்கு நன்றாக தெரியும். சித்த மருத்துவத்தில் பித்த சமனிப்பொருள்
என்று விவகரிக்கப்படும் நம் தினசரி உணவில் பயன் படுத்தப்படும் பொருள். பத்து மிளகு
இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு அருந்தலாம் என்ற போற்றப்படுகிறது.இன்றைய ஆய்வில்
இதில் உள்ள piperine என்ற வேதிப்பொருள் கிருமி கொல்லும் செயலும், பிற மருந்துகளின்
உட்கிரகித்து குறைந்த அளவிலேயே மருந்துகள்
நன்றாக செயல்பட செய்யும் தன்மை உடையது என்று நிருபிக்கப்பட்டுள்ளது, பற்பாடகம்
தரையில் படரும் சிறு செடி நூல் போன்ற மெல்லிய தண்டு உடையது .கிருமி நாசினி செய்கையும்,
சுரமகற்றி .செய்கையும் உடையது.ஈரலை பாதிக்கும் பல் வேறு நச்சு பொருட்களில் இருந்து
பாதுகாக்கும். கோரை கிழங்கு விவசாயிகளால் பெரிதும் வெறுக்கப்படுகின்ற களை புல்லானாலும்
சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன் படுகின்ற கிழங்கை உடையது.வீக்கம், வலியை குறைப்பதுடன்
நோய் எதிர்ப்பு சக்தியையும் (immune stabilizer) செயலும் உடையது.
எப்படி பயன்படுத்துவது ?
வைரஸ் நோயினால் சுரம் தொற்று நோயாக பரவும்
காலத்தில் நோய் தடுப்பிற்காக தினசரி இரண்டு வேளை உணவுக்குப பின் குறைந்தது 5 நாட்களுக்காவது தொடர்ந்து பயன் படுத்த
வேண்டும். சுரம் வந்த பின் பயன்படுத்துவதாக இருந்தால் ஃப்ளு சுரமாக இருந்தால் ஒரு நாளுக்கு 3 வேளை பயன் படுத்த வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன்
பயன்படுத்துவதே நல்லது. பொதுவாக சிறந்த நிறுவனங்களில்
தயாரிக்கப்படும் நிலவேம்பு கஷாய சூரணம், ஒன்றிரண்டாக இடிக்கப்பட்டு பொடியாக எளிதில் நீரில் கொதிக்க வைக்கும் பொழுது
கஷாயமாக மாறும் தன்மையில் இருக்கும். 2 கிராம் பொடிக்கு 100 மில்லிலிட்டர் நீர் சேர்த்து மூடி வைத்து நன்றாக கொதித்த பின்னர் வடிகட்டி பருக
வேண்டும். ஒரு முறை கொதிக்க வைத்ததை மீண்டும் கொதிக்க வைக்க கூடாது. தயாரித்த மூன்று
மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். மூடி வைக்காமல் கொதிக்க வைக்கும் பொழுதும்
அதிகம் கொதிக்க வைத்தாலும் மருந்தில் உள்ள
நறு மண வேதியல் பொருள்கள் மருந்தில் தங்காமல் ஆவியாக வெளியேறும், மருந்தின் செயல் தன்மை
குறையும்
.
.
எல்லா வகை காய்ச்சலுக்கும் ஒரே தீர்வா,?
எல்லா வகை காய்ச்சலுக்கும் ஒரே தீர்வா என்று கேட்டால் நிச்சியமாக இல்லை என்றே சொல்ல வேண்டும் . குடற்
கரம் என்னும் டைபாய்டு காய்ச்சலில் சித்த மருத்துவத்தில் பிற மருந்துகள் உண்டு. நிலவேம்பு
கஷாயம் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது குடல் புண்ணை அதிகபடுத்தும். வயிற்றில்
எரிச்சலை உண்டாக்கலாம்.
மழை காலங்களில் வைரஸ் கிருமிகளால் வரும் flu, - பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் முதலிய சுரத்தினால் பலரும் பதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு முறை (8 ஆண்டுகளுக்கு முன்பு ) நானும் வைத்யா உஸ்மான் அலியும் குஜராத்தில் பவநகர் பகுதியில் உள்ள ஒரு பெரிய மருந்து நிறுவனதின் மேலான் இயக்குநருடன் பேசிக்கொண்டு இருந்தோம். ''எங்கள் மருந்து நிறுவனதில் பல ஊழியர்கள் சுரத்தால் பாதிக்கப்பட்டு விடுப்பு எடுத்துள்ளார்கள் . எஞ்சிய ஊழியர்கள் சுரத்தால் பாதிக்கப்படாமல் இருக்க சித்த மருந்துண்டா'' என்று கேட்டார். உடனடியாக அருகாமையில் இருந்த 'ஜரிபுட்டி' - நாட்டு மருந்துக்கடைக்கு சென்று தேவையான மூலிகை சரக்குகளை வாங்கி அங்கயே கஷாயம் காய்ச்சி 3 நாட்கள் 300 ஊழியர்கள் பருக கொடுத்தோம். மறு நாளிலிருந்து சுரத்தினால் விடுப்பு எடுப்பது குறைந்தது. பின்னர் மேலும் சில தொழிற்சாலைகளில் வருடம் தோறும் இரு முறை கொடுப்பதை வழக்கமாகி இருக்கிறோம் . அங்கெல்லாம் சுரம் வரும் காலங்களில் ஊழியர்கள் சுரத்தால் பாதிக்கப்படாமல் productivity அதிகமாவதை தொழிற்சாலை மேலாண்மையினர் சொல்வது உண்டு. நோய் தடுக்கவும், தீர்க்கவும் உதவும்.
இதனை
தண்ணீருக்கு மாற்றாக பயன் படுத்தலாமா.
ஒரு சிலர் ஆறு மாத காலமாக இதனை தண்ணீருக்கு மாற்றாக
பயன் படுத்துவதாக பெருமையுடன் சொல்கிறார்கள். இது நிச்சயம் தவறு. அளவுக்கு மிஞ்சினால்
குருதி சர்க்கரை குறைவு இரத்த அழுத்த குறைவு முதலிய எதிர் வினையை ஏற்படுத்தும். இதனால் தலைசுற்றல் மயக்கம் முதலியன
ஏற்படலாம் . ஊரில் சுரம் பலருக்கும் ஏற்படும்
காலத்திலும், பருவ கால மாற்றத்தின் பொழுது, குறிப்பாக ஆடி மாதம் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வைரஸ் சுரம்
வராமல் இருக்க முன்று நாள் காலை , மாலை இரு
முறை உணவுக்கு பின் குடிக்க வேண்டும். ஒரு
முறை குடித்த பின் ஆறு மாத இடைவெளியில் தற்காப்புக்காக
குடிக்க வேண்டும்
நீரை தேற்றான் கோட்டையை இடித்து போட்டு சுத்தம் செய்யலாம்
,நெல்லிமர கட்டையும் நீர் தொட்டிகளில் போட்டு நீரை சுத்தம் செய்யலாம் . இவை இரண்டும் நீரின் கடினத்தன்மையை
போக்குவதுடன் நோய் கிருமிகளையும் கொல்லும் . சீரகம் சேர்ந்து மூடி போட்டு நன்றாக கொதிக்க வைத்து அறிய
நீரை பருகலாம்
நிலவேம்பை (கசாயம்) பற்றிய என்னுடைய கேள்வி தொடர்கிறது. தமிழக வனத்துறை எந்த சித்த ஆயுர்வேத மருந்து செய் நிலையங்களுக்கும் சந்தனம் தராத நிலையில் TAMPCOL,IMPCOPS, காந்தி கிராமம் அறக்கட்டளை நடத்தும் LSS நிறுவனம் ஆகியவை மட்டுமே முறைப்படி சந்தனம் பெற உரிமை பெற்று பயன்படுத்துகின்றன. பல நிறுவனங்கள் சந்தனம் சேர்க்காமலேயே நிலவேம்பு குடிநீர் பொடி தயாரிகிறார்கள். அது போல பேய்புடல் சேர்க்காமல் பாகல் இலையை பயன் படுத்துகிறார்கள். சிலர் நிலவேம்பு செடியின் பொடியை மட்டுமே நிலவேம்பு குடிநீர் என்று விற்கிறார்கள் . லேபிலில் எல்லா 9 மூலிகைகளின் பெயர் குறிப்பிடாமல் இருந்தாலும் தயாரிப்பு உரிமை எண் (Drug Mfg.Lic) குறிப்பிடாமல் இருந்தாலும் பொது மக்கள் வாங்க வேண்டாம் . போலி மற்றும் தரம் குறைந்த மருந்தால் நோய் தடுப்பும் நோய் குணமும் கிடைக்காது.
நிலவேம்பு குடிநீர் விலை ஏன் அதிகம்
நிலவேம்பு குடிநீர் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் சந்தனம் திண்மையான மைய கட்டை
(Heartwood -Rs 4500/Kg). சிலர் லாப நோக்குடன் குறைந்த விலையுடைய மென்கட்டையை பயன்படுத்துகிறார்கள் மென்கட்டை (Sapwood.Rs
150/Kg) இரண்டிலும் உள்ள வேதியல் கூறுகள் வெவ்வேறு என்பது ஆய்வு மூலம் புலனாகும். இந்த சுழலில்தான் காலத்திற்கு ஏற்ப சித்த மருந்துகளில் ஏற்படும் மாற்றங்களை பற்றி தொடர் ஆய்வு தேவை என்பது என் போன்றோர் குரல். இதைத்தான் சித்த மருத்துவம் காலத்திற்கு ஏற்ப மாறுதலுக்கு தன்னை உட்படுத்தி கொள்ள தயாரா
தமிழக அரசின் ' மழைக்கால நிலவேம்பு சிறப்பு மருத்துவ முகாம்' நாளையுடன் முடிவடைகிறது. ஒரு நாளில் 5.5 இலட்சம் மக்கள் கடைவீதி , சந்தை, பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் நடத்தப்பட்ட முகாங்களில் மருந்தை பெற்றிருக்கிறார்கள் . தமிழக மக்கள் நம்பிக்கையுடன் இந்த சித்த மருந்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதை விட பஞ்சாயத்து தலைவர்கள், நகர, கிராம உள்ளாட்சி அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் சித்த மருத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பணிபுரியும் சித்த மருத்துவர்களை ஒரு மரியாதையுடன் பார்க்கும் மனப்பான்மை ஏற்பட்டு இருப்பதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். தமிழக அரசு சித்த மருத்துவத்திற்கு இது போன்ற நெருக்கடி நிலையிலாவது முன்னுரிமை வழங்குவது நன்றே.
ஆனால் வெவ்வேறு சுரத்திற்கும் சித்த மருத்துவத்தில் தனி தனி நோய் போக்கும் மருந்தும் வழிமுறையும் இருப்பதால் சுய மருத்துவம் ஒரு நாளுக்கு மேல் மேற்கொள்ளாமல் மருத்துவரை ஆலோசித்து நோயன்றி வாழுங்கள்